Prime Minister's Office
பம்பாய் ஐஐடி-யின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் சுருக்கம்
Posted On :11, August 2018 14:09 IST
சுதந்திர இந்தியாவில் தொழில்நுட்பத்தின் மூலம் தேச நிர்மாணத்திற்கு புதிய திசையைக் காட்டுவதற்கு உருவாக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக பம்பாய் ஐஐடி (இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம்). இந்தப் பணியில் தொடர்ச்சியாக கடந்த 60 ஆண்டுகளாக நீங்கள் பணியாற்றி வருகிறீர்கள். 100 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட பயணம் இன்று 10,000 மாணவர்கள் என்ற அளவை எட்டியுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில், உலகின் உயர்ந்த நிறுவனங்களில் ஒன்றாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் வைரவிழாவைக் கொண்டாடியிருக்கிறது. ஆனால், இன்று பட்டம் பெற இருக்கின்ற, எனக்கு முன்பாக அமர்ந்துள்ள நீங்கள் எல்லோருமே முக்கியமான வைரங்கள்தான். இங்கிருந்து பட்டம் பெற்ற பின் உலகம் முழுவதும் இந்தியாவுக்கு பெருமிதத்தை உருவாக்கப் போகிறவர்கள் நீங்கள்.
இங்கு பட்டம் பெற இருக்கின்ற இந்தியாவைச் சேர்ந்த மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் முதலாவதாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பம்பாய் ஐஐடியின் கடந்த 60 ஆண்டுகால முயற்சிகளின் பயனாக நாட்டின் மிகச் சிறந்த நிறுவனமாக தன்னை இது செதுக்கிக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ.1,000 கோடி நிதியுதவி கிடைக்க இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
பட்டமளிப்பு விழாவிற்குப்பின் திறக்கப்படவுள்ள புதிய கட்டிடம் மிகவும் முக்கியமானது. எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் மையம் ஆகியவை இந்த கட்டிடத்திலிருந்து செயல்படவுள்ளன. எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் என்பவை நாட்டுக்கு மட்டுமன்றி உலகிற்கே பெரும் சவால்களாக உள்ளன. இந்த இரண்டு துறைகளில் மிகச்சிறந்த ஆராய்ச்சி சூழலை எதிர்காலத்தில் இந்த இடம் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்தக் கட்டிடத்தில் சூரியசக்தி சோதனைக்கூடமும் அமைக்கப்படவுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இது, சூரியசக்தி தொடர்பாக மாணவர்கள் ஆராய்ச்சி செய்ய உதவும்.
இன்று உங்களுக்கு அளிக்கப்படுகின்ற பட்டம் உங்களின் இலக்கை நோக்கிய அர்ப்பணிப்பின் அடையாளமாகும். இது வெறும் மைல்கல்தான். உண்மையான சவால், வெளி உலகத்தில் காத்திருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் குடும்பங்களின் நம்பிக்கைகள். நாட்டின் 125 கோடி மக்களின் நம்பிக்கைகள், உங்களின் சொந்த நம்பிக்கைகள் இணைந்ததுதான் இதுவரை நீங்கள் சாதித்ததும் எதிர்காலத்தில் சாதிக்கப்போவதும். நீங்கள் செய்யவிருப்பவை புதிய தலைமுறைகளின் எதிர்க்காலத்தைக் கட்டமைக்கும். புதிய இந்தியாவும் பலமடையும்.
லட்சோபலட்சம் மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் வெற்றிபெற மீண்டும் ஒருமுறை உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
***
எஸ்எம்பி/கோ