நாட்டின் 71ஆவது சுதந்திர தின விழாவையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அவர் உரையின் முக்கிய அம்சங்கள் :
இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.
- நம் நாடு விடுதலையும் பெரும் புகழும் அடைவதற்காக பங்களித்தவர்கள், இன்னல்கள் அடைந்தவர்கள், இன்னுயிர்களை நீத்த புனித ஆன்மாக்கள், தாய்மார்கள், சகோதரர்களுக்கு 125 கோடி மக்களின் சார்பில் இந்தச் செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நான் தலைதாழ்த்தி வணங்குகிறேன்.
- இந்தியாவின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட மேன்மைக்குரிய பெண்களையும் ஆண்களையும் நாம் நினைவுகூர்கிறோம்.
- நாட்டின் பல இடங்களில் நேரும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்காகவும் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளுக்காகவும் இந்திய மக்கள் தோளோடு தோள் கொடுத்து நிற்கிறார்கள்.
- இந்த ஆண்டு சிறப்புக்குரிய ஆண்டாகும். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆவது ஆண்டு விழா, பிஹார் மாநிலம் சம்பரானில் மகாத்மா காந்தியை ஈர்த்த சம்பரான் சத்தியாக்கிரகத்தின் 100ஆவது ஆண்டு விழா, கணேச உற்சவத்தின் 125ஆவது ஆண்டு விழா.
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் அன்று வெளியேற்றுவதற்கானது (Bharat Chhodo). இன்று இந்தியாவைப் பிடித்ததாகிவிட்டது (Bharat Jodo).
- புதிய இந்தியாவை உருவாக்குவது என்ற லட்சியத்துடன் நாம் அனைவரும் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லவேண்டும்.
- 1942ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரையில் நாடு ஒட்டுமொத்த வலியமையைக் காட்டியது. வரும் 5 ஆண்டுகளில் அதே வலிமை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு ஆகியவற்றோடு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும்.
- நம் நாட்டில் பெரியது அல்லது சிறியது என்று எதுவும் இல்லை. அனைவரும் சமமானவர்களே. அத்துடன் சாதகமான மாற்றத்தை இணைந்து கொண்டு வர இயலும்.
- சிறியவர் என்றோ பெரியவர் என்றோ பாராமல், பாரபட்சமின்றி, நாட்டின் 125 கோடி மக்களின் இணைந்த வலிமையுடன் புதிய இந்தியாவை உருவாக்கச் செயல்படவேண்டும்.
- 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி சாதாரண நாளாக இருக்காது. இருபத்தோராம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருப்பார்கள். அவர்கள் பேறு படைத்தவர்கள் (Bhagya Vidhatas)
- நாம் “பார்க்கலாம்” (Chalta Hai) என்ற அலட்சியப் போக்கைக் கைவிடவேண்டும். மாறாக, “மாற்ற முடியுமா” என்று பார்க்கும் எண்ணம் (Badal Sakta Hai) வேண்டும். அதுதான் நாட்டை உயர்த்தும்.
- நாடு மாறிவிட்டது. மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றம் அடையும். இந்த நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் நாம் முன்னேறிக் கொண்டிருக்க வேண்டும்.
- நாட்டின் பாதுகாப்பு முதன்மையானது. உள்நாட்டு பாதுகாப்பும் முக்கியமானது. கடலோரப் பகுதிகளோ அல்லது எல்லைப் பகுதிகளோ இணைய உலகமோ (cyber world) அல்லது விண்வெளியோ எல்லாவிதமான பாதுகாப்பும் பகைமைச் சக்திகளைத் தோற்கடிக்கும் வல்லமை படைத்தவை.
- நமது சீருடை படையினர் இடதுசாரி தீவிரவாதம், பயங்கரவாதம், ஊடுருவல், அமைதியைச் சீர்குலைக்கும் சக்திகள் ஆகியவற்றுடன் போராடி வெல்வதில் உச்ச தியாகத்தை அடைந்திருக்கிறார்கள். துல்லியத் தாக்குதலை (surgical strike) அடுத்து, இந்தியாவின் வலிமையையும் செல்வாக்கையும் உலகம் அங்கீரிக்க வேண்டும்.
- ஒரே பணி, ஒரே ஓய்வூதியம் என்ற கொள்கை நமது பாதுகாப்புப் படையினரின் மன உறுதியை வலுப்படுத்தியுள்ளது.
- தேசத்தையும் மக்களையும் சூறையாடியவர்கள் நிம்மதியாக இன்று தூங்க முடியவில்லை.
- பினாமி சொத்துகளை வைத்திருந்தவர்களுக்கு எதிராக இதுவரை எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை. அண்மையில் கொண்டுவரப்பட்ட பினாமி ஒழிப்புச் சட்டத்தின்படி அரசு ரூ.800 கோடி அளவுக்கு பினாமி சொத்துகளைக் குறுகிய காலத்தில் பறிமுதல் செய்துள்ளது. இவை நடைபெற்றபோது, பொதுமக்கள் இந்த நாடு நேர்மையானவர்களுக்கானது என்ற உணர்ந்துள்ளனர்.
- நேர்மையின் திருவிழாவை இன்று கொண்டாடுகிறோம்.
- கூட்டுறவு கூட்டாட்சி என்ற உத்வேகத்தை ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நிரூபித்திருக்கிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை ஆதரிப்பதற்காக நாடு ஒன்று திரண்டு வந்துள்ளது. அதற்கு தொழில்நுட்பமும் உதவியிருக்கிறது.
- ஏழைகள் நாட்டின் முதன்மையானவற்றில் பங்கேற்கிறார்கள். நாடு முன்னேற்றப் பாதையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.
- விரைந்து செயல்படுவது, எளிமையாகச் செயலாற்றுவது ஆகியவையே நல்ல ஆளுகை ஆகும்.
- உலகில் இந்தியாவின் உயர்வு அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத் தொல்லையை முறியடிக்க உலகம் நம்முடன் இருக்கிறது. இதற்கு உதவும் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
- ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றத்துக்காக நாம் பாடுபடவேண்டும்.
- ஜம்மு காஷ்மீரின் பிரச்சினையைத் துப்பாக்கியாலோ கண்டனங்களாலோ தீர்க்காமல், அரவணைத்தே தீர்க்கலாம்.
- கறுப்புப் பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான போர் தொடரும். தொழில்நுட்பத்தின் உதவியோடு வெளிப்படைத் தன்மை கொண்டுவரப்படும்.
- பயங்கரவாதிகள் குறித்தோ, பயங்கரவாதம் குறித்தோ மென்மையான போக்கு கடைப்பிடிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை.
- அரசு இயந்திரத்தின் ஆதார சக்தியாக மக்களே இருப்பார்கள். வேறு முறை ஏதும் இல்லை. (Tantra se Lok nahin). (Lok se tantra chalega).
- புதிய இந்தியா ஜனநாயகத்தின் மிகப் பெரிய சக்தியாகத் திகழும்.
- மாறிவரும் தேவைகளுக்கும், மாறிவரும் தொழில்நுட்பத்துக்கும் ஏற்ப வேலைவாய்ப்பு இயல்பும் மாறும்.
- நமது இளைஞர்கள் வேலையைத் தேடுவோராக இல்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்குவோராக அமையத் தூண்டுவோம்.
- “முத்தலாக்” விவாகரத்து முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். இந்த விஷயத்தில் பெண்களின் துணிவைப் பாராட்டுகிறேன். அவர்களது போராட்டத்துக்குத் துணையாக இருக்கிறோம்.
- இந்தியா அமைதி, ஒற்றுமை, நல்லெண்ணம் ஆகியவற்றுக்கான நாடு. இங்கே நமக்கு சாதி, சமய வேறுபாடுகள் உதவாது.
- நம்பிக்கை என்ற பெயரில் வன்முறை மகிழ்ச்சிக்குரியது அல்ல. இந்தியாவில் அதை ஏற்க முடியாது.
- நாடு அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றில் செயல்படுகிறது. நமது பண்பாடும், நாகரிகமும்தான் அனைவரையும் அரவணைத்துச் செல்கின்றன.
- நம் நாட்டை புதிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறோம். அதுவும் வேகமாக இயங்குகிறது.
- பிகார், அசாம், மேற்கு வங்கம், ஒடிசா, வடகிழக்கு ஆகிய கிழக்கு இந்தியாவின் மீது குறிப்பிடத்தக்க கவனம் செலுத்துகிறோம். இப்பகுதிகள் மேலும் முன்னேற்றம் அடையவேண்டும்.
- நமது விவசாயிகள் உணவு தானிய உற்பத்தியில் கடுமையாக உழைத்து சாதனை படைத்துள்ளனர்.
- பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தினால் (Pradhan Mantri Fasal Beema Yojana) திட்டத்தின் மூலம் 5.75 கோடிப் பேர் பயனடைந்துள்ளனர்.
- பிரதம மந்திரி வேளாண் பாசனத் திட்டத்தின் (Pradhan Mantri Krishi Sinchayee Yojana) கீழ் 30 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் 50 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
- பிரதம மந்திரி விவசாயிகள் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் (Pradhan Mantri Kisan Samapada Yojana) கீழ் விவசாயிகள் விதைகளைப் பெறுவதிலிருந்து, உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவது வரையில் உறுதுணையாக இருந்து, கை கொடுக்கிறோம்.
- மின்சார வசதி இல்லாத 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- ஜன தன் திட்டத்திற்கான 29 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
- எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஜாமீன் இல்லாமலே கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்துக்காகவும் மக்களின் நலனுக்காகவும் ஊழலுக்கு எதிராகப் போரிட்டு வருகிறோம்.
- கறுப்புப் பணத்துக்கும் ஊழலுக்கும் எதிரான எங்களது போராட்டம் தொடரும். மேலும் செயல்படுத்தப்படும். நாட்டில் கொள்ளையடிப்பது அனுமதிக்கப்படமாட்டாது.
- ஊழலற்ற இந்தியா அமைவதற்காக நாம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் நல்ல பலன்களைத் தந்துள்ளன.
- இதுவரை ரூ.1.25 லட்சம் கோடிக்கு கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது.
- ஒரு லட்சத்து 75 ஆயிரம் போலி நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
- ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு, சேமிப்பும், திறமையான போக்குவரத்தும் அதிகரித்துள்ளன. திறமை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
- பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளுக்கு அதிகமான பணம் வந்துள்ளது. பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளித்துள்ளது.
- நம் நாடு உலகில் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்டது. இது தகவல்தொழில்நுட்ப யுகம் ஆகும். டிஜிட்டல் பணப் பரிமாற்றப் பாதையில் நாம் முன்னேறிச் செல்வோம்.
- டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னணியில் இருந்து நடத்துவோம். மேம்படுத்துவோம். பணப் பரிமாற்றத்துக்கு “பீம் செயலியை” (Bhim App) கடைபிடிப்போம்.
- கூட்டுறவு கூட்டாட்சி முறையிலிருந்து போட்டித்திறமான கூட்டுறவு கூட்டாட்சி முறையை நோக்கி நகர்ந்து செல்கிறோம்.
- ஒரு பணியை உரிய காலத்தில் நிறைவேற்றாவிட்டால், விரும்பிய பயன் கிடைக்காது என்று பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.
- புதிய இந்தியாவை உருவாக்குவதில் குழுமை இந்தியாவுக்கு (Team India) இது சரியான சந்தர்ப்பம் ஆகும்.
- மின்சாரம், தண்ணீர் வசதியுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் ஏழைகளுக்குக் கிடைக்கும் வகையில் இந்தியாவைக் கட்டமைப்போம்.
- விவசாயிகள் எந்தக் கவலையும் இல்லாமல் உறங்கும் வகையிலான இந்தியாவைக் கட்டமைப்போம். இன்று அவர்கள் ஈட்டுவதைப் போல் இரு மடங்கும் ஈட்டுவார்கள்.
- இளைஞர்கள், பெண்களின் கனவுகள் வடிவம் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் இந்தியாவை உருவாக்குவதே நாம் மேற்கொள்ளும் உறுதியாகும்.
- பயங்கரவாதம், சாதிவேறுபாடு, சமய வேறுபாடு ஆகியவை இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நமது உறுதியாகும்.
- பாரபட்சம், ஊழல் ஆகியவற்றுக்கு இடமில்லாத வகையில் இந்தியாவை ஒன்று சேர்ந்து உருவாக்குவோம்.
- தூய்மையான, சுகாதாரமான, சுயராஜ்யம் என்ற கனவு நிறைவேறும் வகையிலான இந்தியாவை ஒருங்கிணைந்து கட்டமைப்போம்.
- முழுமையான அழகான பாரதத்தை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவோம்.
***