எனதருமை குடிமக்களே,
இந்த செங்கோட்டையிலிருந்து உங்கள் அனைவருக்கும் எனது சுதந்திர நன்னாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நமது நாடு கிருஷ்ண ஜெயந்தியோடு கூடவே சுதந்திர தினத்தையும் கொண்டாடுகிறது. நம்மிடையே பல பால கன்னிகைகளையும் நான் இங்கே காண்கிறேன். சுதர்ஷன் சக்ரதாரி மோகனிலிருந்து துவங்கி சக்ரதாரி மோகன் வரை கலாச்சார, வரலாற்றுப் பாரம்பரியம் படைத்த பெருமை கொண்டவர்களாக நாம் இருக்கிறோம்.
இந்தச் செங்கோட்டையிலிருந்து, நமது 125 கோடி நாட்டுமக்களின் சார்பில், நமது நாட்டின் சுதந்திரத்திற்காக, நமது நாட்டின் பெருமை, சீர்மை ஆகியவற்றுக்காக ஆழ்ந்த துயரங்களை அனுபவித்து, எண்ணற்ற தியாகங்களை செய்து, தங்களின் உயிரையும் தியாகம் செய்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது வந்தனத்தைத் தெரிவித்து, தலைவணங்குகிறேன்.
சில நேரங்களில் இயற்கை பேரழிவுகள் நமக்கு மிகப்பெரும் சவாலாக விளங்குகின்றன. நல்ல பருவமழை நாட்டின் வளத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. எனினும், பருவநிலை மாற்றத்தின் காரணமாக, சில நேரங்களில் அது இயற்கைப் பேரழிவாக மாறுகிறது. சமீபத்தில் நாட்டின் பல பகுதிகளும் இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்டன. மேலும் மருத்துவமனை ஒன்றில் நமது அப்பாவிக் குழந்தைகள் உயிரிழந்தன. இந்த நெருக்கடியான, துயரம் நிரம்பிய தருணத்தில் நமது 125 கோடி குடிமக்களும் அவர்களின் தோளோடு தோள் நிற்கின்றனர். அனைவரின் நலனையும் உறுதிப்படுத்த நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வோம் என்று நெருக்கடியான இத்தருணத்தில் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
எனதருமை மக்களே, சுதந்திர இந்தியாவிற்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாகும். கடந்த வாரம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடினோம். சம்பரான் சத்தியாக்கிரகம், சபர்மதி ஆசிரமம் ஆகியவற்றின் நூற்றாண்டு விழாவையும் இந்த ஆண்டு நாம் கொண்டாடவிருக்கிறோம். ‘ சுயராஜ்யம் எனது பிறப்புரிமை’ என்ற லோகமான்ய திலகரின் அறைகூவலின் நூற்றாண்டும் இந்த ஆண்டில்தான். கணேஷ் திருவிழாவின் 125வது ஆண்டுவிழாவும் இந்த ஆண்டில்தான் நடைபெறவுள்ளது.
கணேஷ் திருவிழாவின் மூலமாக மக்களை அணிதிரட்டத் துவங்கிய நிகழ்வின் 125வது ஆண்டுவிழாவிற்கான நேரமாகவும் இது உள்ளது. நாட்டின் நலனுக்காக நம்மை அர்ப்பணிக்கவும் அது தூண்டியது. 1942 முதல் 1947 வரையிலான காலத்தில் நமது நாட்டு மக்களின் கூட்டான உறுதிப்பாடு இந்த ஐந்தாண்டு காலத்திற்குள்ளேயே பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு வெளியேறும்படி செய்தது. 70வது சுதந்திர தினத்திலிருந்து 75 வது சுதந்திர தினமான 2022 வரையான ஐந்தாண்டு காலத்தில் அதே போன்ற உறுதிப்பாட்டை நாம் இப்போதிலிருந்தே வெளிப்படுத்த வேண்டும்.
75வது சுதந்திர தினத்தை எட்டுவதற்கு நம்மிடம் இப்போது ஐந்தாண்டுகள் உள்ளன. ஒன்றுபட்ட உறுதி,. வலிமை, உறுதிப்பாடு ஆகியவற்றோடு நமது மகத்தான தேசபக்தர்களை நினைவு கூர்வது, 2022ஆம் ஆண்டிற்குள் அவர்களின் கனவுகளை உருவாக்க நமக்கு உதவி செய்யும். எனவே, புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியுடன் நாம் நமது நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நமது நாட்டின் 125 கோடி குடிமக்களின் கூட்டான உறுதிப்பாடு, கடின உழைப்பு, தியாகம், பற்றுறுதி ஆகியவற்றின் சக்தியை நாம் நன்றாகவே உணர்ந்துள்ளோம். பகவான் கிருஷ்ணர் மிகவும் பலம் பொருந்தியவர்தான். என்றாலும் மாடு மேய்ப்பவர் தன் கொம்புகளுடன் அவரது உதவிக்கு வந்த பிறகுதான் அவர்களால் கோவர்தன கிரியை தூக்க முடிந்தது. ராம பிரான் இலங்கைக்குச் செல்ல வேண்டியிருந்தபோது, வானர சேனையான குரங்குகள் அவரது உதவிக்கு வந்தன. ராமசேது கட்டப்பட்டது; ராமபிரானால் இலங்கையை அடைய முடிந்தது. அதன் பிறகு, பஞ்சையும் ராட்டையையும் வைத்துக் கொண்டு விடுதலை என்ற பொன்னாடையை நெய்வதற்கான உறுதிப்பாட்டை தனது நாட்டு மக்களுக்கு வழங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வந்தார்.
நம் நாட்டு மக்களின் கூட்டான உறுதிப்பாடும் வலிமையுமே நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது. இதில் யாருமே சிறியவர்களோ, பெரியவர்களோ அல்ல. மாற்றத்தின் சின்னமாக மாறிய அணிலின் கதை என்றும் நம் மனதில் நீங்காமல் உள்ளது. எனவே, இந்த 125 கோடி மக்களிடையே யாருமே பெரியவர்களோ, சிறியவர்களோ அல்ல என்பதை, நம்மில் ஒவ்வொருவருமே சமமானவர்கள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
எந்த இடத்தைச் சேர்ந்தவராக ஒருவர் இருந்தாலும், நம்மில் ஒவ்வொருவருமே, புதியதொரு உறுதிப்பாட்டுடன், புதியதொரு உற்சாகத்துடன், புதியதொரு வலிமையுடன் முயற்சி செய்தோமெனில், நமது கூட்டான வலிமையின் மூலம் நமது சுதந்திரத்தின் 75வது ஆண்டுவிழாவான 2022க்குள் நமது நாட்டின் தோற்றத்தையே நம்மால் மாற்றி விட முடியும். அது பாதுகாப்பான, வளமான, வலிமையான புதிய இந்தியாவாக இருக்கும். அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குகின்ற, உலக அரங்கில் நாட்டில் புகழையும், பெருமையையும் கொண்டு வருவதில் நவீன அறிவியலும், தொழில்நுட்பமும் முக்கியமான பங்கினை வகிக்கும் புதிய இந்தியாவாக அது இருக்கும்.
விடுதலைக்கான நமது இயக்கம் நமது உணர்வுகளோடு இணைந்த ஒன்றாகும். விடுதலைக்கான இயக்கம் நடைபெற்று வந்த காலத்தில் கல்வி கற்பிப்பதில் ஈடுபட்டுவந்த ஆசிரியர், நிலத்தை உழுது கொண்டிருந்த உழவர், உழைத்துக் கொண்டிருந்த உழைப்பாளி ஆகிய அனைவருமே தாங்கள் செய்து வரும் செயல் எதுவானாலும் அது நாட்டின் விடுதலைக்குப் பங்களிப்பதாகவே இருக்கிறது என்பதை நெஞ்சார உணர்ந்தவர்களாக இருந்தனர் என்பதையும் நாம் நன்றாகவே உணர்ந்துள்ளோம். இந்தக் கருத்துதான் நமது வலிமைக்கான மிகப்பெரும் ஆதாரமாக இருந்தது. வீட்டில், ஒவ்வொரு நாளுமே உணவு தயாரிக்கப்படுகிறது. என்றாலும், கடவுளுக்குப் படைக்கப்படும்போதுதான் அது ‘பிரசாதம்’ என்ற பெயரைப் பெறுகிறது.
நாம் இப்போதும் வேலை செய்து வருகிறோம். என்றாலும், நமது தாய் நாட்டின் பெருமைக்காக, நமது தாய்நாட்டின் புனிதத்திற்காக, நமது நாட்டு மக்களின் வறுமையைப் போக்குவதற்காக, நமது சமூக அமைப்பை முறையானதாக ஆக்குவதற்கு என்ற உணர்வுடன் நாம் அதைச் செய்யும்போது, நமது நாட்டின் மீதான உணர்வுடன் நமது கடமைகளை நிறைவேற்றும்போது, நமது நாட்டின் மீதான பற்றுதல் உணர்வுடன் அதைச் செய்யும்போது, நமது நாட்டிற்கு அதை அர்ப்பணிக்கிறோம் என்ற உணர்வுடன் நமது வேலையைச் செய்யும்போது, நமது சாதனைகள் மிக அதிகமாகவே இருக்கும். இந்த உணர்வோடுதான் நாம் முன்னே அடியெடுத்து வைக்க வேண்டும்.
2018 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் தேதி சாதாரணமானதொரு நாளல்ல. இந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள் 18 வயதை நெருங்கத் துவங்குவர். இவர்களைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு அவர்களின் வாழ்வில் மிகவும் தீர்மானகரமான ஆண்டு ஆகும். 21ஆம் நூற்றாண்டில் நமது நாட்டின் விதியை உருவாக்குபவர்களாக அவர்கள் இருக்கப் போகின்றனர். இந்த இளைஞர்கள் அனைவரையும் நான் மனமார வரவேற்பதோடு, அவர்களை வாழ்த்துகிறேன்; எனது வணக்கங்களையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது. பெருமைமிக்கதொரு நாடு வளர்ச்சிக்கான அதன் பயணத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டுமென்று உங்களை அழைக்கிறது.
எனதருமை குடிமக்களே,
குருஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபோது, உன்னுடைய எண்ணங்கள், நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் உனது இலக்குகளை உன்னால் அடைய முடியும் என அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பதிலளித்தார். நம்மிடம் வலுவானதொரு உறுதிப்பாடு உள்ளது. பிரகாசமானதொரு இந்தியாவை உருவாக்குவதென நாம் உறுதிபூண்டுள்ளோம். நம்பிக்கையற்றதொரு சூழலில் வளர்ந்த நாம் விரக்தி உணர்வை மறுதலித்து விட்டு, இப்போது நம்பிக்கையோடு முன்னேறிச் செல்ல வேண்டும்.
‘நடப்பது நடக்கட்டும்’ என்ற போக்கை நாம் கைவிட வேண்டும். ‘மாற்றத்தைக் கொண்டு வர முடியும்’ என்றே நாம் நினைக்க வேண்டும். ஒரு நாடு என்ற வகையில் இத்தகைய போக்குதான் நமக்கு உதவி செய்யும். தியாகத்துடனும், கடின உழைப்புடனும், எதையாவது செய்வது என்ற உறுதிப்பாடுடன், அதைச் செய்வதற்கான திறமையும், தேவையான ஆதாரங்களும் நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்க வேண்டும். அவ்வாறெனில், மிகப்பெரியதொரு மாற்றம் உருவாகும்; நமது உறுதிப்பாடு சாதனையாக உருவெடுக்கும்.
சகோதர, சகோதரிகளே,
நமது நாட்டு மக்கள் நமது நாட்டின் பாதுகாப்பு குறித்துக் கவலை கொள்வது இயற்கையான ஒன்றுதான். நமது நாடு, நமது ராணுவம், நமது துணிவான நெஞ்சங்கள், நமது சீருடையணிந்த படைகள், அது எந்தப் படையாக இருந்தாலும் சரி, ராணுவமோ, விமானப் படையோ அல்லது கடற்படையோ, சீருடையணிந்த படைகள் அனைத்துமே, எப்போது களத்தில் இறங்கச் சொன்னாலும், தங்களின் வீரத்தையும், தங்கள் வலிமையையும் நிரூபித்து வந்துள்ளன. உயரிய தியாகத்தைச் செய்வதிலும் நமது தீரமிக்க நெஞ்சங்கள் எப்போதும் தயங்கியதில்லை. இடதுசாரி தீவிரவாதமோ, பயங்கரவாதமோ, நாட்டிற்குள் ஊடுருபவர்களோ, நாட்டிற்குள் பிரச்சனையைத் தூண்டிவிட முயற்சிக்கும் சக்திகளோ, அது யாராக இருந்தாலும், நமது நாட்டின் சீருடையணிந்த படையினர் அளப்பரிய தியாகங்களை செய்துள்ளனர். துல்லியமான தாக்குதலை நாம் மேற்கொண்டபோது, இந்தியாவின் திறமை, வலிமையைப் பற்றி உலகம் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.
எனதருமை குடிமக்களே,
இந்தியாவின் பாதுகாப்புதான் எங்களின் முன்னுரிமை ஆகும். அது நமது கடற்கரையோரப் பகுதியாக இருந்தாலும் சரி, நமது எல்லைப் பகுதியாக இருந்தாலும் சரி, நமது விண்வெளிப் பகுதியோ அல்லது இணைய வெளியாக இருந்தாலும் சரி, நமது நாட்டிற்கு எதிரான எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் துடைத்தெறிய நமது சொந்தப் பாதுகாப்பையும் வலிமையையும் உறுதிப்படுத்தும் தகுதி பெற்றதாகவும் இந்தியா உள்ளது.
எனது பேரன்புக்குரிய குடிமக்களே,
நாட்டைக் கொள்ளையடித்த, ஏழைகளைக் கொள்ளையடித்தவர்களால் இன்று அமைதியாகத் தூங்க முடியவில்லை. இதன் விளைவாக, கடுமையாக உழைக்கின்ற, நாணயமானவர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. தனது நேர்மை மதிக்கப்படுகிறது என்று இப்போது நாணயமானவர்கள் உணரத் துவங்கியுள்ளனர். நேர்மையின் விழாவைத்தான் நான் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதில் நாணயமற்ற தன்மைக்கு எவ்வித இடமும் இல்லை. இதுதான் நமக்கு புதியதொரு நம்பிக்கையை அளிக்கிறது.
பினாமி சொத்துக்களுக்கு எதிரான சட்டம் கடந்த பல ஆண்டுகளாகவே எவ்வித அசைவுமின்றிக் கிடந்தது. இப்போது, பினாமி சொத்துக்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை நாம் முன்வைத்திருக்கிறோம். மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே, ரூ. 800 கோடி மதிப்புக்கும் மேலான பினாமி சொத்துக்களை அரசு கைப்பற்றியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் நடக்கும்போதுதான், இந்த நாடு நேர்மையான நபர்களுக்கானது என்ற நம்பிக்கை சாதாரண மக்களிடம் உருவாகிறது.
நமது பாதுகாப்புப் படையினருக்கான ‘ஒரு பதவி – ஒரே ஓய்வூதியம்’ என்ற கொள்கை 30-40 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமுமின்றிக் கிடந்தது. நமது அரசு அதை அமலாக்கியது. நமது வீரர்களின் விருப்பங்களை நாம் நிறைவேற்றும்போது, அவர்களின் உற்சாகம் மேலும் அதிகரிக்கிறது; நமது நாட்டைக் காப்பாற்றுவதற்கான அவர்களின் உறுதிப்பாடும் பல மடங்கு அதிகரிக்கிறது.
நமது நாட்டில் பல மாநிலங்களும் ஒரு மத்திய அரசும் உள்ளன. ஜிஎஸ்டி ஒத்துழைப்பு மிக்க கூட்டாட்சி உணர்வை வெளிப்படுத்துகிறது. போட்டி மனப்பாங்குடன் கூடிய ஒத்துழைப்பு மிக்க கூட்டாட்சிக்கு புதியதொரு வலிமையையும் அது வழங்கியுள்ளது. ஜிஎஸ்டியின் வெற்றிக்கு அதை வெற்றிபெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட கடினமான உழைப்பே காரணமாகும். தொழில்நுட்பம் அதை அற்புதமான ஒன்றாக சித்தரித்துள்ளது. மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே ஜிஎஸ்டியை நம்மால் கொண்டுவர முடிந்தது குறித்து உலகமே வியப்படைந்துள்ளது. இது நமது திறமையை பிரதிபலிப்பதோடு, நமது எதிர்காலச் சந்ததியினர் மீதான நம்பிக்கையை வளர்க்கவும் உதவியுள்ளது.
புதிய முறைகள் உருவாகி வருகின்றன. இன்று இரண்டு மடங்கு வேகத்தில் சாலைகள் உருவாக்கப்படுகின்றன. இரண்டு மடங்கு வேகத்தில் ரயில்வே பாதைகள் போடப்படுகின்றன. நாடு விடுதலை பெற்ற பிறகும் கூட இதுவரையில் இருளில் மூழ்கிக் கிடந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 29 கோடி மக்களுக்கான வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மண் வளத்திற்கான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2 கோடிக்கும் மேற்பட்ட தாய்மார்களும் சகோதரிகளும் இப்போது விறகுகளைக் கொண்டு சமையல் செய்வதில்லை; அவர்கள் இப்போது சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர். ஏழைகளான ஆதிவாசிகள் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை பெற்றுள்ளனர். வளர்ச்சியின் கடைக்கோடியில் உள்ள மனிதரும் கூட இப்போது பொது வெளியில் இணைந்திருக்கிறார். நாடு முன்னேற்றத்தை நோக்கி நடைபோடுகிறது.
ரூ. 8 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள கடன்கள் எந்தவித ஈட்டுறுதியும் இன்றி சுய வேலைவாய்ப்பிற்காக இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வங்கிக் கடன்கள் மீதான வட்டி குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கேயென ஒரு வீட்டை கட்ட விரும்பும்போது, குறைந்த வட்டி விகிதத்துடன் அவர் கடன் பெறுகிறார். இந்த வகையில், நாடு முன்னேறிச் செல்வதோடு, மக்களும் இந்த இயக்கத்தில் இணைந்து கொள்கின்றனர்.
காலம் இப்போது மாறியுள்ளது. நேர்முகத் தேர்வு என்ற நடைமுறையை கைவிடுவது என்பதைப் போன்று, தான் சொல்கின்ற அனைத்தையும் செய்வது என்பதில் அரசு உறுதியோடு உள்ளது.
தொழிலாளர் நலப் பிரிவில் மட்டுமே, சிறியதொரு வர்த்தகர் 50-60 படிவங்களை நிரப்பித் தர வேண்டிய நிலை இருந்தது. அதை வெறும் 5-6 படிவங்களாகச் சுருக்கியதன் மூலம் நாங்கள் அதை மேலும் வசதியானதாகச் செய்துள்ளோம். நிர்வாகச் செயல்முறையை எளிமைப்படுத்துவதன் மூலம் சிறந்த நிர்வாகத்தை வழங்குவது குறித்து, இதைப் போன்ற பல சம்பவங்களை என்னால் எடுத்துக் கூற முடியும். இதை வலியுறுத்துவதன் மூலம் விரைவாக முடிவெடுப்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். எனவேதான் எமது நிர்வாகம் குறித்து 125 கோடி நாட்டு மக்களால் நம்பிக்கை கொள்ள முடிகிறது.
எனதன்பிற்குரிய நாட்டு மக்களே,
உலகம் முழுவதிலும் இன்று இந்தியாவின் தகுதி உயர்ந்துள்ளது. பயங்கர வாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் நாம் தனியாக இல்லை என்பதை அறியும்போது உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். உலகின் பல நாடுகளும் இந்த விஷயத்தில் நம்மை உயிர்ப்பான வகையில் ஆதரித்து வருகின்றன.
ஹவாலாவாக இருக்கட்டும்; அல்லது பயங்கரவாதத்திற்கு உதவி செய்கின்ற வேறு எந்த விஷயமாக இருக்கட்டும், இவை குறித்த முக்கிய தகவல்களை வழங்கி உலக சமூகம் நமக்கு உதவி வருகிறது. இந்த விஷயத்தில் நம்மோடு ஒன்றிணைந்து, நமது திறமையை அங்கீகரிக்கும் நாடுகள் அனைத்திற்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், அதன் வளம், அந்த மாநில மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு ஜம்மு-காஷ்மீர் அரசு மட்டுமல்ல; பொறுப்புள்ள குடிமக்கள் என்ற வகையில் நம் அனைவருக்குமே பொறுப்புண்டு. ஒரு காலத்தில் சொர்க்கமாக விளங்கிய அந்த மாநிலத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட நாம் உறுதி பூண்டுள்ளோம்.
காஷ்மீர் குறித்து வீரவசனங்களும் அரசியலும் இருந்துவந்துள்ளன. மிகச் சிலரால் பரப்பி விடப்படும் பிரிவினை வாதத்திற்கு எதிரான போரில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்த எனது நம்பிக்கையில் நான் மிகவும் தெளிவாகவே உள்ளேன். வசவுகளை அள்ளி வீசுவதாலோ அல்லது துப்பாக்கிக் குண்டுகளால் சுடுவதாலோ இந்தப் பிரச்சனையைத் தீர்த்து விடமுடியாது. அனைத்துக் காஷ்மீரிகளையும் அணைத்துக் கொள்வதன் மூலமே அதைத் தீர்த்து வைக்க முடியும். இதுதான் 125 கோடி இந்தியர்களின் பாரம்பரியமும் கூட. எனவே வசவுகளோ, குண்டுகளோ அல்ல, அனைவரையும் அணைத்துக் கொள்வதன் மூலமே மாற்றம் உருவாகும். இந்த உறுதியுடன் தான் நாம் முன்னோக்கிச் செல்கிறோம்.
பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதிகள் குறித்து மென்மையான அணுகுமுறை என்ற பேச்சே கிடையாது. பொதுவெளியில் வந்து இணையுமாறு நாம் தீவிரவாதிகளை கேட்டுக் கொண்டு வருகிறோம். ஜனநாயகம் அனைவருக்குமே சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. உரிமைகளும் காது கொடுத்துக் கேட்கப்பட வேண்டும். பொதுவெளியில் இருப்பதன் மூலம் மட்டும் அதற்கு உயிரூட்ட முடியும்.
இந்தப் பகுதிகளில் இருந்து எண்ணற்ற இளைஞர்களை அணிதிரட்டிய இடதுசாரி தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்துவதில் பாதுகாப்பு படையினரின் முயற்சிகளை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
பாதுகாப்புப் படைகள் நமது எல்லைகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. வீர தீரச் செயல்களுக்கான விருதுகளைப் பெற்றவர்களின் துணிவு குறித்த விவரங்களை வழங்கும் இணைய தளம் ஒன்றை இந்திய அரசு இன்று துவங்குகிறது என்பதை அறிவிப்பதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த துணிவு நிரம்பிய நெஞ்சங்கள் பற்றிய முழு விவரங்களையும் வழங்கும் நோக்கத்துடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதி படைத்த இணைய தளம் ஒன்றும் துவங்கப்படுகிறது. இவர்கள் செய்த தியாகங்கள் குறித்த செய்தி நமது இளம் தலைமுறையினருக்கு நிச்சயமாக ஊக்கமளிக்கும்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன், நாட்டில் நேர்மையையும், வெளிப்படைத் தன்மையையும் வளர்த்தெடுக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். கருப்புப் பணத்திற்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். தொழில்நுட்பத்தின் தலையீட்டுடன், அரசு அமைப்புடன் ஆதார்-ஐ இணைக்க நாங்கள் மெதுவாக முயற்சி செய்து வருகிறோம். இந்த அமைப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த மாதிரியை உலகெங்கிலும் உள்ள மக்கள் பாராட்டுவதோடு, அதை ஆய்வு செய்தும் வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்தில் வாழும் சாதாரண மனிதர் கூட தனது பொருட்களை அரசிற்கு சப்ளை செய்ய முடியும். இதற்கிடையே அவர்களுக்கு எவ்வித இடைத்தரகரும் தேவையில்லை. இந்த இணைய தளத்தின் மூலமாகவே அரசு தனக்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்து வருகிறது. பல்வேறு மட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
சகோதர, சகோதரிகளே,
அரசின் திட்டங்களை அமல்படுத்துவதும் இப்போது வேகம்பிடித்துள்ளது. வேலை தாமதமாகும்போது, அந்தத் திட்டம் மட்டுமே தாமதமாவதில்லை. இதில் செலவாகும் பணம் மட்டுமே விஷயமல்ல. ஒரு வேலை நிறுத்தப்படும்போது, ஏழைக்குடும்பங்கள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
செவ்வாய் கிரகத்திற்கு நம்மால் ஒன்பதே மாதங்களில் சென்றடைந்துவிட முடியும். அதைச் செய்து முடிக்கும் திறமை பெற்றவர்களாக நாம் இருக்கிறோம்.
அரசின் திட்டங்களை நான் ஒவ்வொரு மாதமும் பரிசீலனை செய்கிறேன். குறிப்பிட்ட ஒரு திட்டம் எனது கவனத்திற்கு வந்தது. அது 42 வருட கால திட்டம். 70-72 கிலோ மீட்டர் நீளத்திற்கு இருப்புப்பாதை போடுவதுதான் அந்தத் திட்டம். என்றாலும் அது கடந்த 42 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமுமின்றி செயலிழந்து கிடக்கிறது.
எனதருமை சகோதர, சகோதரிகளே,
ஒன்பது மாத காலத்திற்குள் செவ்வாய் கிரகத்தையே சென்றடையும் திறமை கொண்டதாக ஒரு நாடு இருக்கும்போது, 42 ஆண்டுகளாக 70-72 கிலோமீட்டர் நீள இருப்புப்பாதையை போட அதனால் எப்படி முடியாமல் போகும்? இத்தகையவைதான் ஏழைகளின் மனதில் சந்தேகங்களை உருவாக்குவதாகும். இவை அனைத்தையும் நாம் இப்போது எங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளோம். தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றங்களைக் கொண்டுவர நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். பூமி தொடர்பான தொழில்நுட்பமோ அல்லது விண்வெளி தொடர்பான தொழில்நுட்பமோ, மாற்றத்தைக் கொண்டுவர இத்தகைய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் இணைப்பதற்கு நாங்கள் முயற்சித்துள்ளோம்.
யூரியா, கெரசின் ஆகிய பொருட்களின் விஷயத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்த காலத்தை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். மாநில அரசுகள் தம்பியைப் போல் மத்திய அரசினால் அண்ணனின் தோரணையில் நடத்தப்பட்டன. நான் நீண்ட காலத்திற்கு ஒரு முதலமைச்சராக இருந்திருக்கிறேன். நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் முக்கியத்துவம் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். மாநில முதல்வர்கள், மாநில அரசுகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எனக்குத் தெரியும். எனவேதான் நாங்கள் ஒத்துழைப்பு மிக்க கூட்டாட்சிக்கு முக்கியத்துவம் வழங்கினோம். இப்போது நாங்கள் போட்டித் தன்மை நிரம்பிய ஒத்துழைப்பு மிக்க கூட்டாட்சியை நோக்கி நகரத் துவங்கியுள்ளோம். அனைத்து முடிவுகளையுமே நாங்கள் ஒன்றாக அமர்ந்து எடுப்பதையும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.
செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நமது முன்னாள் பிரதமர் ஒருவர் நமது நாட்டில் உள்ள மின்விநியோக நிறுவங்களின் மோசமான நிலைமை குறித்து தனது உரையில் குறிப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தப் பிரச்சனை பற்றி அவர் தன்னுடைய கவலைகளை வெளியிட்டார். இன்று உதய் திட்டத்தின் மூலம் இந்த மின்சார நிறுவனங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். இது கூட்டாட்சியின் உண்மையான உணர்விற்கு ஓர் உறுதியான எடுத்துக்காட்டாகும்.
ஜி.எஸ்.டி.யாக இருந்தாலும் அல்லது நவீன நகரத் திட்டமாக இருந்தாலும், தூய்மை இந்தியா திட்டமாக இருந்தாலும் அல்லது கழிவறைகள் கட்டுவதாக இருந்தாலும், அல்லது எளிதாக வர்த்தகம் செய்வதாக இருந்தாலும், இவை அனைத்தையும் நாம் மாநிலங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து ஒன்றாக இணைந்து செயலாற்றி சாத்தியமாக்கி இருக்கிறோம்.
அன்பார்ந்த எனது சக நாட்டு மக்களே,
புதிய இந்தியாவில், ஜனநாயகம் என்பது மிகப்பெரிய பலமாகும். ஆனால் இந்த ஜனநாயகத்தை நாம் வெறும் வாக்குப் பெட்டிகளாக சுருக்கிவிட்டோம். இருந்தபோதிலும் ஜனநாயகத்தை வாக்குப் பெட்டிகளுக்குள் மட்டும் அடக்கி வைத்துவிட முடியாது. எனவே மக்கள் ஒரு முறையால் இயக்கப்படாத, மக்களால் இயக்கப்படும் ஒரு முறையை புதிய இந்தியாவின் ஜனநாயகத்தில் காணவேண்டும். இதுவே நமது உறுதியாக இருக்க வேண்டும். இத்தகைய ஜனநாயகம் புதிய இந்தியாவின் அடையாளமாகி அந்தத் திசையை நோக்கி நாம் முன்னேற வேண்டும்.
‘சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்று லோகமான்ய திலகர் கூறினார். சுதந்திர இந்தியாவில் ‘நல்ல நிர்வாகம் எனது பிறப்புரிமை’ என்பது நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.’சுரஜா’ அல்லது நல்ல நிர்வாகம் நமது கூட்டுப்பொறுப்பாக இருக்க வேண்டும். குடிமக்கள் தங்களது கடமைகளை செய்வதுடன் அரசும் தனது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.
’சுயராஜ்ஜியம்’ என்பதில் இருந்து நாம் ‘சுரஜா’ என்னும் நல்ல நிர்வாகத்திற்கு முன்னேறும் போது குடிமக்களும் பின்தங்கிய நிலையில் இருக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு, சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை கைவிடவேண்டும் என குடிமக்களிடம் நான் கேட்டுக்கொண்ட போது, தேசம் முழுவதும் அதற்கு செவிமடுத்தது. தூய்மை பற்றி நான் பேசினேன். இந்த தூய்மை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல நாட்டின் அனைத்து பகுதி மக்களும் தற்போது கைகோர்க்கின்றனர்.
ரொக்க மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது இந்த உலகமே ஆச்சரியமடைந்தது. மோடி அவ்வளவுதான் என மக்கள் கருதினார்கள். ஆனால் நமது 125 கோடி மக்களும் காட்டிய பொறுமை மற்றும் நம்பிக்கை காரணமாக ஊழலுக்கு எதிரான நமது இயக்கத்தில் நம்மால் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது.
மக்கள் பங்களிப்பு என்ற இந்தப் புதிய பழக்கத்துடன், நமது நாட்டை முன்னெடுத்துச் செல்லும் நமது முயற்சியில் மக்களின் ஈடுபாடு நமது இலக்கை எட்ட நமக்கு உதவும்.
அன்பார்ந்த எனது சக நாட்டு மக்களே,
‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற கோஷத்தை லால் பகதூர் சாஸ்திரி நமக்கு கொடுத்துள்ளார். அதன் பின்னர் நமது விவசாயிகள் ஒருபோதும் பின்னோக்கிப் பார்த்ததில்லை. இயற்கைச் சீற்றங்களை எதிர்நோக்கும் நிலையிலும் அவர்கள் சாதனை அளவு மகசூலை அளித்து புதிய சிகரங்களை எட்டியுள்ளனர். இந்த ஆண்டு பருப்பு வகைகள் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
எனது அன்பான சகோதர சகோதரிகளே,
பருப்பு வகைகளை இறக்குமதி செய்யும் பாரம்பரியம் இந்தியாவிடம் இருந்ததேயில்லை என்பதுடன், சில தருணங்களில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட போதிலும் சில ஆயிரம் டன்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏழைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில், அவர்கள் 16 லட்சம் டன் அளவுக்கு பருப்பு உற்பத்தி செய்த போது, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு அவர்களின் உற்பத்திப் பொருளை விலைக்கு வாங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையை எடுத்தது.
பிரதம மந்திரி ஃபசல் பீமா திட்டம் நமது விவசாயிகளுக்கு பாதுகாப்பு வளையம் ஒன்றை அளித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த திட்டம் 3.25 கோடி விவசாயிகளுக்கு மட்டுமே பாதுகாப்பு அளித்தது. தற்போது மிகக் குறுகிய காலமான மூன்று ஆண்டுகளுக்குள் அதிக விவசாயிகள் இதன் கீழ் பாதுகாக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை விரைவில் 5.75 கோடியை எட்டும்.
பிரதம மந்திரி கிசான் சின்சாய் திட்டம் விவசாயிகளின் தண்ணீர் தேவை பிரச்சனைக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனது விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைத்தால், அவர்களால் தங்கள் நிலத்தில் இருந்து கூடுதல் மகசூலைப் பெற முடியும். அதனால் தான் இந்த சுதந்திர தின விழாவின் போது செங்கோட்டையில் உரையாற்றிய நான் சில அறிவிப்புகளை வெளியிட்டேன். அவற்றில் 21 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதுடன் எஞ்சிய 50 திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். 99 பெரிய திட்டங்களை நிறைவேற்ற நான் உறுதிபூண்டுள்ளேன். 2019ம் ஆண்டுக்குள் இந்த 99 பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம், நாங்கள் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியும். விதைகள் அளிப்பது முதல் அவரது உற்பத்திப் பொருட்கள் சந்தையைச் சென்றடையும் வரை விவசாயிகளின் கரங்களை பிடித்து உடன் சென்றால் மட்டுமே விவசாயிகளிடையை பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதற்கு உள்கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி தேவை. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் வீணாகின்றன. இந்த நிலையை மாற்றுவதற்காக அரசு உணவு பதப்படுத்துதல் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கிறது. உள்கட்டமைப்பு கட்டுவதை ஊக்குவிக்க இந்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்பாதா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விதைகள் வழங்கப்படுவது முதல் சந்தைக்கு செல்வது வரை விவசாயிகளுடன் கரங்கள் கோர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வழிமுறைகள் செயல்படுத்தப்படும். இந்த ஏற்பாடுகள் கோடிக்கணக்கான நமது விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
தேவைகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுடன் நமது நாட்டில் உள்ள வேலைகளின் இயல்புகள் மாறிக்கொண்டிருக்கின்றன. வேலை தொடர்பான திட்டங்களுக்கான பல்வேறு புதிய முயற்சிகளை அரசு மேற்கொண்டிருப்பதுடன் 21ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப மனித வளங்களை உருவாக்குவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு அடமானம் இன்றி கடன்கள் அளிப்பதற்கான மாபெரும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும், வேலை கொடுப்பவராக அவர் மாற வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதம மந்திரி முத்ரா திட்டம் லட்சக்கணக்கான இளைஞர்களை சுயச்சார்பு உள்ளவர்களாக ஆக்கியுள்ளது. அது மட்டுமின்றி, ஒரு இளைஞர் ஒன்று, இரண்டு அல்லது மூன்று பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கச் செய்கிறது.
கல்வித்துறையில், நாங்கள் பல்கலைக்கழகங்களை உலகத் தரமான பல்கலைகழகங்களாக தரமுயர்த்த அவற்றுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து சுதந்திரம் அளிப்பதற்கான முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளோம். தங்களது விதியை அவர்களே நிர்ணயித்துக் கொள்ள 20 பல்கலைக்கழகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது. இதுதவிர ரூ. 1,000 கோடி நிதி அளிக்கவும் அரசு விரும்புகிறது. நமது நாட்டின் கல்வி நிறுவனங்கள் இதனை வெற்றிகரமானதாக ஆக்க முன்வரும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
கடந்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் 6ஐ.ஐ.டி.க்கள், 7 புதிய ஐ.ஐ.எம்.கள் மற்றும் 8 புதிய ஐ.ஐ.ஐ.டிக்களை நிறுவி இருப்பதுடன் கல்வியை வேலை வாய்ப்புக்களுடன் இணைப்பதற்கான அடிப்படைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளோம்.
எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளே, குடும்பங்களில் உள்ள மகளிர் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கின்றனர். எனவே, அவர்களுக்கு இரவுப்பணிகளிலும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் நமது குடும்பங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர். நமது எதிர்காலம் சிறப்பாக அமைய அவர்களின் பங்களிப்பு முக்கியமாகும். இதன் காரணமாகவே முன்பு 12 வாரங்களாக இருந்த மகப்பேறு விடுமுறையை நாம் 26 வாரங்களாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதைப் பொருத்தவரை, முத்தலாக் முறையில் கடினமான வாழ்க்கைக்கு தள்ளப்படும் நமது சகோதரிகளை கௌரவிக்க நான் விரும்புகிறேன். அவர்களுக்கு வேறு வழியே இல்லை என்பதால் முத்தலாக் முறையில் பாதிக்கப்பட்டவர்கள், நாட்டில் ஒரு பேரியக்கத்தைத் தொடங்கி உள்ளனர். நாட்டின் அறிவார்ந்த சமூக மக்கள், ஊடகம் ஆகியவற்றை உலுக்கிய அவர்கள் முத்தலாக் முறைக்கு எதிராக பேரியக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். முத்தலாக் முறைக்கு எதிராக இந்த இயக்கத்தைத் தொடங்கிய, அந்த சகோதரிகளை நான் பாராட்டுவதுடன் அவர்களது இந்த இயக்கம் வெற்றிபெற இந்த நாடு உதவிபுரியும் எனவும் நான் நம்புகிறேன். இந்த உரிமையைப் பெறுவதற்கு அந்த தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் இந்த நாடு உதவும். இந்தியா அவர்களுக்கு முழு ஆதரவை அளிக்கும். அவர்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த முக்கியமான நடவடிக்கையில் வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன். இந்த விவகாரத்தில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.
எனது அன்பான குடிமக்களே,
சில சமயங்களில் நம்பிக்கையின் பெயரால், சிலர் பொறுமையின்றி சமூக இழையை அழிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இந்த நாடு அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையால் நிர்வகிக்கப்படுகிறது. சாதியம் மற்றும் மதவாதம் என்ற விஷத்தால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. இது காந்தி மற்றும் புத்தரின் மண், அனைவரையும் ஒன்றிணைத்து நாம் முன்னேற வேண்டும். இது நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். இதனை நாம் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதால்தான் நம்பிக்கையின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது.
மருத்துவமனையில் நோயாளிக்கு ஏதாவது ஏற்பட்டு அந்த மருத்துவமனை தீயிட்டு கொளுத்தப்பட்டால், ஏதேனும் விபத்து ஏற்பட்டு அதனால் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டால், ஒரு போராட்டம் நடத்தப்பட்டு பொதுச் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டால், அது சுதந்திர இந்தியாவுக்காகவா? அது 125 கோடி இந்தியர்களின் சொத்து. இது யாருடைய கலாச்சார மரபு? இது நம்முடைய கலாச்சார மரபு. 125 கோடி மக்களின் மரபு. இது யாருடைய நம்பிக்கை? இது நமது நம்பிக்கை. நமது 125 கோடி மக்களின் நம்பிக்கை. இதனால் தான் நம்பிக்கையின் பெயரால் நிகழும் வன்முறைகள் இங்கு ஒருபோதும் வெல்லாது. இதனை இந்த நாடு ஒருபோதும் ஏற்காது. அன்று ‘பாரத் சோடோ’ என்பது நமது நோக்கமாக இருந்தது மாறி இன்று ‘பாரத் ஜோடோ’ நமது நோக்கமாக இருக்க வேண்டும் என நமது நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொருவரையும், சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் நாம் அரவணைத்து நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
வளமான இந்தியாவை உருவாக்க நமக்கு வலிமையான பொருளாதாரம், சமநிலையிலான வளர்ச்சி மற்றும் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பும் தேவை. அப்போதுதான் நாம் கனவு காணும் இந்தியாவை உருவாக்க முடியும்.
சகோதர, சகோதரிகளே,
கடந்த மூன்று ஆண்டுகளில் நாம் எண்ணிலடங்கா முடிவுகளை எடுத்திருக்கிறோம். அவற்றில் சிலவற்றை நாம் கவனித்திருக்கலாம், பலவற்றை நாம் கவனிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பெரும் மாற்றங்களை நோக்கி நாம் செல்லும் போது சில தடைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் இந்த அரசின் செயல்படும் முறையை பாருங்கள், ரயில் நிலையம் ஒன்றைக் கடக்கும் போது ரயில் ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு மாறும்போது அதன் வேகம் 60கிலோ மீட்டரில் இருந்து 30 கிலோ மீட்டராக குறைய வேண்டும். தண்டவாளம் மாறும்போது ரயிலின் வேகம் குறைகிறது. ஒட்டுமொத்த நாட்டையும் வேகத்தைக் குறைக்காமல் வேறு பாதைக்கு மாற்ற நாம் விரும்புகிறோம். நாம் வேகத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஜி.எஸ்.டி. போன்ற புதிய சட்டங்கள் மற்றும் முறைகளை நாம் கொண்டு வந்திருக்கலாம். நாம் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி நமது பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உள்கட்டமைப்புக்கு நாம் முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். சிறு நகரம் ஒன்றில் ரயில்வே நிலைய நவீனமயம் தொடங்கி விமான நிலையம் கட்டுவது வரை, நீர் வழிகள் அல்லது சாலைகள் விரிவாக்கம், எரிவாயு தொகுப்பு அல்லது நீர் தொகுப்பு அமைப்பது, கண்ணாடி இழை கேபிள் கட்டமைப்பை உருவாக்குவது போன்ற உள்கட்டமைப்புக்களை உருவாக்க நாம் முதலீடு செய்திருக்கிறோம். அனைத்து வகையான நவீன உள்கட்டமைப்புகளுக்கும் நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
எனதருமை நாட்டுமக்களே,
21வது நூற்றாண்டை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்வதற்கு கிழக்கு இந்தியா வளம் பெறுவது தேவைப்படுகிறது. அதிகளவிலான வளங்களையும், உயர்ந்த மனிதவள ஆதாரங்களையும், மகத்தான இயற்கை வளத்தையும், பணி சக்தியையும் அது பெற்றுள்ளதுடன், வாழ்க்கையை மாற்றக்கூடிய ஆற்றலையும் பெற்றுள்ளது. பீகார், அசாம், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் வடகிழக்கு உள்ளிட்ட கிழக்கு இந்தியாவின் மீது நாங்கள் குறிப்பிடத்தக்க கவனத்தைச் செலுத்துகிறோம். இப்பகுதிகள் மேலும் வளர வேண்டும். இயற்கை வளங்களை அதிகமாகப் பெற்றுள்ள இவை நாட்டை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்வதற்கு மிக கடினமாக முயன்று வருகின்றன.
சகோதர, சகோதரிகளே,
ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவது முக்கியமான பணியாகும் மற்றும் அதற்கு உத்வேகத்தை அளிக்க நாங்கள் முயன்று வருகிறோம். அரசு அமைத்தவுடன், எங்களது முதல் பணி சிறப்பு புலணாய்வுத் துறையை அமைத்ததாகும். மூன்றாண்டுகளுக்குப் பின்பாக, இன்று, நாங்கள் ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தைக் கைப்பற்றி, குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வந்து சரணடைய வைத்துள்ளோம் என்பதை நாட்டுமக்களுக்குத் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ரொக்க மதிப்பிழக்கச் செய்தல் நடவடிக்கை. மதிப்பிழக்கச் செய்தல் நடவடிக்கையின் மூலம் பல மைல்கல்களை நாங்கள் அடைந்துள்ளோம். மறைத்து வைக்கப்பட்டிருந்த கருப்புப்பணம் முறையான பொருளாதாரத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 7 நாட்களிலிருந்து 10 நாட்களுக்கு, 10 நாட்களிலிருந்து 15 நாட்கள் என நாங்கள் காலக் கெடுவை நீட்டித்ததை நீங்கள் கண்டிருப்பீர்கள். சிலநேரங்களில் நாங்கள் பழைய நோட்டுகளை பெட்ரோல் பங்குகள், மருந்துக் கடைகளில் சிலநேரங்களில் ரயில் நிலையங்களில் மாற்றிக்கொள்ள அனுமதித்தோம், ஏனெனில் அனைத்து பணத்தையும் முறையான வங்கி முறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும், அப்பணியை நிறைவேற்றுவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். வெளிப்புற வல்லுநர்கள் நடத்திய ஆராய்ச்சியின்படி, முன்பு வங்கி அமைப்பிற்கு வராமல் இருந்த சுமார் ரூ.3 லட்சம் கோடிகள், மதிப்பிழக்கச் செய்தல் நடவடிக்கைக்கு பின்பாக அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தக் கண்காணிப்பின் கீழ் ரூ.1.75 கோடிக்கும் அதிகமான தொகை வங்கிகளில் செலுத்தப்பட்டது. ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான கருப்புப்பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டதுடன், இந்த முறையானது அவர்களை கணக்குக் காட்ட வைத்தது. கருப்புப்பண புழக்கத்தையும் இது தடுத்தது. ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 5 வரை புதிதாக வருமானவரி தாக்கல் செய்தவர்கள் 56 லட்சமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், வெறும் 22 லட்சம் பேர் மட்டுமே வருமானவரி தாக்கல் செய்துள்ளனர். ஒரு வகையில், இது இருமடங்காக உயர்த்தியுள்ளது. இது கருப்புப்பணத்திற்கு எதிரான எங்களது போராட்டத்தின் விளைவாகும்.
தங்களின் வருமானத்தைவிட குறைவான வருமானத்தை தெரிவித்த 18 லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர். எனவே இது குறித்து அவர்கள் விளக்க வேண்டும். ஏறக்குறைய 4.5 லட்சம் பேர் தற்போது தாமாக முன்வந்து, தங்களது தவறுகளை ஏற்றுக் கொண்டு உரிய வழியில் வணிகம் செய்ய முயன்றுள்ளனர். இதற்கு முன்பு வருமான வரி குறித்து அறியாத மற்றும் வருமான வரி செலுத்தாத ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், தற்போது வருமானவரி செலுத்திடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சகோதர, சகோதரிகளே,
நிறுவனங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, முடிவற்ற விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபடும் பழக்கம் நம் நாட்டில் உள்ளது. பொருளாதாரம் குறைந்து வருவது மற்றும் பலவற்றும் குறித்து மக்கள் ஊகிக்கத் துவங்கியுள்ளனர்.
கருப்புப்பணம் உடையவர்கள் சொந்தமாக போலி நிறுவனங்கள் வைத்திருந்ததை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான போலி நிறுவனங்கள் உள்ளதை, மதிப்பிழக்கச் செய்தல் நடவடிக்கைக்கு பின்பான புள்ளி விவரங்கள், வெளிப்படுத்தியுள்ளது. யாராவது கற்பனை செய்து பார்த்து இருப்பீர்களா? இந்த 3 லட்சம் போலி நிறுவனங்களில், 1.75 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐந்து நிறுவனங்கள் மூடப்பட்டாலும், மக்களிடம் பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. இங்கு, ஒரு லட்சத்து ஐந்து ஆயிரம் நிறுவனங்களை நாம் மூடியுள்ளோம். நாட்டின் வளங்களை கொள்ளையடித்தவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். இப்பணியை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
ஒரே முகவரியில் பல போலி நிறுவனங்கள் செயல்பட்டு வந்ததை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஒரே முகவரியில் ஏறத்தாழ 400 நிறுவங்கள் செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை கேள்வி கேட்க ஒருவரும் இல்லை. அங்கே முழுமையான கூட்டணி இருந்தது.
ஆகையால், சகோதர, சகோதரிகளே, ஊழல் மற்றும் கருப்புப்பணத்திற்கு எதிராக நான் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகிறேன். வளமான எதிர்கால இந்தியாவிற்காகவும், நமது மக்களின் நல்வாழ்விற்காகவும் - நாங்கள் ஊழலை எதிர்த்துப் போராடுகிறோம்.
சகோதர, சகோதரிகளே,
நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம், சரக்கு மற்றும் சேவை வரிக்கு பின்பாக இது மேலும் உயர்ந்து வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்பு, ஒரு லாரி ஓட்டுநர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை அடைவதற்கான பயண நேரத்தில் 30 விழுக்காடு சேமிக்கிறார். சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதன் மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் சேமிக்கப்பட்டுள்ளது. இது அவரது திறனில் 30 விழுக்காடு உயர்வாகும். இந்திய போக்குவரத்துத் துறையில் 30 விழுக்காடு அதிகமான திறனை அடைவது எதை உணர்த்துகிறது என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்திருப்பீர்களா? இந்த புரட்சிகரமான மாற்றத்தை சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வந்துள்ளது.
எனதருமை நாட்டு மக்களே,
ரொக்க மதிப்பிழக்கச் செய்தல் நடவடிக்கையின் காரணமாக, இன்று, வங்கிகள் போதுமான பணப்புழக்கத்தைக் கொண்டுள்ளன. வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. ஒரு சாதாரண மனிதனும் முத்ராவின் மூலம் நிதிகளைப் பெற இயலும். அவர் தனது சொந்த காலில் நிற்பதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுள்ளார். என்றாவது ஒரு நாள் சொந்த வீடு வாங்கவேண்டும் என்று ஆசை கொண்ட நடுத்தர மற்றும் அதற்கும் கீழான வர்க்கத்தினர், வங்கிகளிலிருந்து குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெறுகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கின்றன.
எனதருமை நாட்டு மக்களே,
காலம் மாறிவிட்டது. நாம் 21வது நூற்றாண்டில் உள்ளோம். உலகத்தின் அதிகளவிலான இளைஞர்களை நம் நாடு கொண்டுள்ளது.
டிஜிட்டல் உலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறன் உலகத்தால் அறியப்பட்டுள்ளது. நாம் இன்னும் தொடர்ந்து பழைய மனநிலையிலேயே இருக்க வேண்டுமா? தோலிலான காசுகள் ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்தது, அவை படிப்படியாக முடிவிற்கு வந்தது. இன்று நாம் காகிதப் பணம் கொண்டுள்ளோம். இந்த காகிதப் பணம் மெதுவாக டிஜிட்டல் பணமாக மாற்றப்படும். டிஜிட்டல் பரிமாற்றங்களை நோக்கி நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பரிமாற்றங்களுக்கு நாம் பீம் செயலியை ஏற்றுக்கொண்டு, அதனை நமது பொருளாதார செயல்பாடுகளின் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும். முன்செலுத்து முறை மூலமும் நாம் பணியாற்ற வேண்டும். டிஜிட்டல் பரிமாற்றங்கள் உயர்ந்துள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 34 விழுக்காடு உயர்ந்துள்ளதுடன், முன்செலுத்து முறை பரிமாற்றங்கள் 44 விழுக்காடு அதிகரித்துள்ளன. நாம் ரொக்கமற்ற பொருளாதாரத்தை நோக்கி முன்னேற்ற வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, அரசின் சில திட்டங்கள் சாதாரண மனிதனின் சேமிப்பிற்கு உறுதி தருகின்றன. நீங்கள் எல்.ஈ.டி. பல்புகளைப் பயன்படுத்தினால், வருடத்திற்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை சேமிக்க முடியும். நாம் தூய்மையான பாரதத்தில் வெற்றியடைந்தால், ஏழை மக்கள் மருந்துகளின் மீது ரூ.7000 சேமிக்க முடிவதுடன், அதனை வேறு பயன்பாட்டிற்காக செலவழிக்க இயலும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் ஒரு வகையில் மக்களின் சேமிப்பிற்கு உதவும்.
மக்கள் மருந்து மையங்கள் மூலம் மலிவு விலையில் மருந்துகளைப் பெறுவது ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். அறுவைசிகிச்சைகள் மற்றும் ஸ்டண்ட்களின் மீதான செலவினம் அதிகமாக இருந்தது. மூட்டு அறுவைசிகிச்சைக்கும் அதுபோன்று குறைக்க நாங்கள் முயன்று வருகிறோம். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இத்தகைய செலவினத்தைக் குறைத்திட நாங்கள் கடுமையாக முயன்று வருகிறோம்.
முன்பு, மாநில தலைநகரங்களில் மட்டும் டயாலிசிஸ் வசதி இருந்தது. தற்போது, நாங்கள் மாவட்ட அளவில் டயாலிசிஸ் மையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளோம். ஏழை மக்களுக்கு இலவச டயாலிசிஸ் சேவை கிடைக்கும் வகையில் நாங்கள் ஏற்கனவே 350 முதல் 400 மாவட்டங்களில் இந்த வசதியைத் துவக்கியுள்ளோம்.
உலகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நடைமுறைகளை உருவாக்கியுள்ளதில் நாங்கள் பெருமையடைகிறோம். ஜி.பி.எஸ். மூலம் ‘என்.ஏ.வி.ஐ.சி. வழிகாட்டும் முறை’யை நாம் உருவாக்கியுள்ளோம். எஸ்.ஏ.ஏ.ஆர்.சி. செயற்கைகோளை வெற்றிகரகமாக செலுத்தியதன் மூலம் நாம் அண்டை நாடுகளுக்கு உதவியுள்ளோம்.
தேஜஸ் விமானத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகத்திற்கு நமது மேலாதிக்கத்தை வலியுறுத்தியுள்ளோம். டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கான பீம் ஆதார் செயலி உலகத்திற்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. நாட்டில் தற்போது கோடிக்கணக்கான ரூபே அட்டைகள் உள்ளன. அனைத்து அட்டைகளும் செயல்முறைக்கு வந்தவுடன், இதுவே உலகின் அதிகமான அட்டைகளாக இருக்கும்.
எனதருமை நாட்டு மக்களே, நீங்கள் புதிய இந்தியா உறுதிமொழியை மேற்கொண்டு முன்னேற வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். , “अनियत काल:, अनियत कालः प्रभुत्यो विपलवन्ते, प्रभुत्यो विपलवन्ते” என நமது வேதங்கள் கூறுகிறது. ஒரு பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் நாம் நிறைவேற்றவில்லையெனில், நாம் விரும்பிய முடிவினைப் பெற இயலாது என்பதை இது தெரிவிக்கிறது. எனவே, ‘இந்திய அணி’க்காக, அதன் 125 கோடி நாட்டுமக்களுக்காக, 2022-க்குள் இலக்கை அடைவதற்கான உறுதிமொழியை நாம் ஏற்க வேண்டும்.
2022-க்குள் சிறந்த, கம்பீரமான இந்தியாவைக் காண நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்.
எனவே, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதியுடன் கூடிய நிரந்தர வீடுகளைக் கொண்ட ஏழைமக்கள் உள்ள இந்தியாவை நாம் கூட்டாக உருவாக்குவோம்.
விவசாயிகளை கவலையை மறந்து உறங்கச் செய்யும் அத்தகைய இந்தியாவை நாம் கூட்டாக உருவாக்குவோம். அவர்கள் தற்போது ஈட்டும் வருமானத்தைவிட 2022-க்குள் இரண்டு மடங்கு வருமானம் ஈட்டுவார்கள்.
இளைஞர்கள், பெண்கள் தங்கள் கனவுகளை நனவாக்கிட போதிய வாய்ப்புகளைப் பெறும் அத்தகைய இந்தியாவை நாம் கூட்டாக உருவாக்குவோம்.
பயங்கரவாதம், மதவாதம் மற்றும் சாதியவாதம் அற்ற அத்தகைய இந்தியாவை நாம் கூட்டாக உருவாக்குவோம்.
ஊழல் மற்றும் சிபாரிசுகளுக்கும் எவரும் இடமளிக்காத அத்தகைய இந்தியாவை நாம் கூட்டாக உருவாக்குவோம்.
சு-ராஜ் கனவை நிறைவேற்றும் தூய்மையான, ஆரோக்கியமான இந்தியாவை நாம் கூட்டாக உருவாக்குவோம்.
அதனால்தான் எனதருமை நாட்டுமக்களே, வளர்ச்சியை நோக்கிய இப்பயணத்தில் நாம் கூட்டாக முன்நோக்கி செல்வோம்.
சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில், நாம் 75வது சுதந்திர தினத்தை நோக்கியுள்ள நிலையில், மாட்சிமைமிக்க மற்றும் கம்பீரமான இந்தியாவை உருவாக்கிடும் கனவை நோக்கி நாம் கூட்டாக நடைபோடுவோம்.
இந்த சிந்தனையை நினைவில் கொண்டு, நமது சுதந்திர இயக்கத்தின் கதாநாயகர்களின் முன்பு நான் தலைவணங்கி மரியாதை செய்கிறேன். எனது 125 கோடி நாட்டுமக்களின் புதிய நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் முன்பு நான் தலைவணங்கி மரியாதை செய்வதுடன், இந்த புதிய உறுதிமொழியின் மீது இந்திய அணி நடைபோட அறைகூவல் விடுக்கிறேன்.
இந்த சிந்தனையுடன், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரத் மாதாகி ஜே, வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த்
பாரத் மாதாகி ஜே, பாரத் மாதாகி ஜே, பாரத் மாதாகி ஜே, பாரத் மாதாகி ஜே,
வந்தே மாதரம், வந்தே மாதரம், வந்தே மாதரம், வந்தே மாதரம்,
அனைவருக்கும் நன்றி.
****