Responsive image

Press Information Bureau

Government of India

Prime Minister's Office

குஜராத் மாநிலம் கேவாடியாவில் ஒற்றுமைச் சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்

Posted On :31, October 2018 18:29 IST

விந்திய மற்றும் சாத்பூரா மலைகளுக்கு அருகே புனித நர்மதை ஆற்றங்கரையினிலே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று (31.10.2018) நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினத்தை சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவாக கொண்டாடி வருகிறோம். இத்தருணத்தில் நமது நாட்டின் இளைஞர்கள் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

இன்று இந்தியாவின் பொன்னான தலைவர் ஒருவரின் நினைவுகளை மீட்டு கொண்டு வந்துள்ளோம். இன்று தான் சர்தார் பட்டேல் நிலத்திலிருந்து ஆகாயத்தை நோக்கி மகுடம் சூட்டப்படுகிறார். இதன் மூலம் இந்தியா புதிய வரலாற்றை எழுதியிருப்பதோடு எதிர்கால உத்வேகத்திற்கான அடித்தளத்தை அமைத்திருக்கிறது.

இந்த சிலைதான் உலகிலேயே மிக உயரமான சிலை. இந்த சிலை நமது எதிர்கால சந்ததியினருக்கு சர்தார் பட்டேலின் தைரியம், திறன்கள், உறுதிப்பாடு ஆகியவை பற்றி எடுத்துரைக்கும். அன்னை இந்தியாவை துண்டாட நினைத்தவர்களின் சதியை முறியடித்த ஒரு நபர் குறித்து இது மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். இத்தகைய இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு என் மரியாதையை அர்ப்பணிக்கிறேன்.

அன்னை பாரதம் 550 சிறிய, பெரிய சமஸ்தானங்களாக பிளவுப்பட்டிருந்த நேரத்தில் சர்தார் பட்டேலின் அனைத்து திறமைகளுக்கும் சவால் விடப்பட்டது. சர்தார் பட்டேலின் வார்த்தைகளை கேட்டு ஒற்றுமையின் ஆற்றலை உணர்ந்து இந்த சமஸ்தானங்கள் இந்தியாவில் இணைந்தன.

அன்றைய நிலையில் உலகம் எதனை இந்தியாவின் நலிவு நிலை என்று கருதியதோ அதனை சர்தார் பட்டேல் வலிமையாக மாற்றி நாட்டிற்கு வழிகாட்டினார்.

இந்திய நிர்வாகப் பணிகள் – ஐ.ஏ.எஸ். பற்றி குறிப்பிட்ட பட்டேல், இந்தப் பணிகளின் பெருமையை நாட்டின் இளைஞர்கள் உயர்த்த வேண்டும். இதில் மேலும் வெளிப்படைத்தன்மையையும், நேர்மையையும் சேர்க்க வேண்டும் என்று கூறினார். இத்தகைய பட்டேலின் மனப்பூர்வமான கருத்துகளின் அடிப்படையில் இந்தியாவின் நிர்வாகப் பணிகள் இரும்பு கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு கஷ்டமான நிலையை எதிர்கொண்டிருந்தபோது சர்தார் பட்டேல் அதன் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அச்சமயத்தில் நாட்டின் மக்கள் அனைவரையும் ஜனநாயகத்துடன் இணைப்பதற்கு தனது ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் அர்ப்பணித்தார்.

இன்று திறந்து வைக்கப்படும் சிலை சர்தார் பட்டேலின் அன்பு, திறன்கள், தொலைநோக்கு, ஆன்மீகம் ஆகியவற்றின் ஒட்டு மொத்த உருவமாக அமைந்துள்ளது. ஒற்றுமைச் சிலை நமது பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களுக்கு சான்றாகவும் அமைந்துள்ளது. சர்தார் பட்டேல் நினைவிடம் கோடிக்கணக்கான இந்தியர்கள் அவர்பால் கொண்டுள்ள மரியாதையின் சின்னம் மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புப் பெருக்கத்தில் முக்கிய பங்கினையும் வகிக்கிறது. ஆயிரக்கணக்கான பழங்குடியின இளம் சகோதர, சகோதரிகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடியது.

கடந்த 4 ஆண்டுகளில் நாட்டின் முன்னோடித் தலைவர்கள் ஆற்றிய பங்கினை நினைவு கூறும் மாபெரும் இயக்கங்களை அரசு முன்னின்று நடத்தி வருகிறது. அந்த வகையில் நாம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சத்ரபதி சிவாஜி போன்றோர் நினைவாக அருங்காட்சியகங்கள் அமைத்து வரலாற்றை மீண்டும் சித்தரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த சிலை அமைக்கும் திட்டம், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சர்தார் பட்டேலின் தொலைநோக்கை, அவரது கடின உழைப்பை, அவரது திறன்களை முன்னெடுத்துச் செல்வதான முயற்சியே ஆகும். சர்தார் பட்டேல், இந்திய நாடு ஆற்றல் மிக்கதாகவும், அமைதியானதாகவும், உணர்வுபூர்வமானதாகவும், எச்சரிக்கையுடனும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டுமென விரும்பினார். நமது முயற்சிகள் அனைத்தும் அவர் கண்ட கனவை நனவாக்கும் திசையிலேயே செல்கின்றன.

சர்தார் பட்டேல் நாட்டின் சமஸ்தானங்களை அரசியல் ரீதியில் ஒருங்கிணைத்தது போல நமது அரசு ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கை மூலம் பொருளாதார ரீதியில் ஒருங்கிணைக்க பாடுபட்டு வருகிறது.

இந்தியர் ஒவ்வொருவரும் தனது ஜாதி சமயத்தை மறந்து தாம் இந்தியன் என்பதை மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும்: ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமைகள் இருப்பது போலவே கடமைகளும் உள்ளன என்று சர்தார் வல்லபாய் பட்டேல் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொல்லிச் சென்றுள்ளார்.

அந்த வகையில் அவரது நினைவிடமான இந்த மையத்திலிருந்து ஒற்றுமைக்கான உத்வேகத்தை நாம் பெறுகிறோம். இந்த உணர்வுடன் நாம் விரைவாக முன்னேற வேண்டும். நம்முடன் சேர்ந்தவர்களையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற நமது கனவை நோக்கி நாம் அனைவரும் முன்னேற வேண்டும்.

சர்தார் பட்டேல் வாழ்க

இந்தியாவின் ஒற்றுமை வாழ்க

அனைவருக்கும் நன்றி.

பிரதமரின் முழு ஆங்கில உரைக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

********