independenceday-2016

Press Information Bureau

Government of India

Prime Minister's Office

நாட்டின் 71வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் இருந்து பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்

Posted On :15, August 2017 10:37 IST

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நாட்டின் 71வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று செங்கோட்டையிலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

 

இந்தியாவின் விடுதலைக்காகக் கடுமையாக உழைத்த மகத்தான ஆண்களையும், பெண்களையும் பிரதமர் அத்தருணத்தில் நினைவு கூர்ந்தார். இயற்கைப் பேரழிவுகளாலும், கோரக்பூரில் நிகழ்ந்த துயர சம்பவத்தினாலும் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை இந்திய மக்கள் பகிர்ந்து கொள்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்த வருடம் மிகவும் சிறப்பானது; ஏனெனில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டாகவும், சம்பரான் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டாகவும், பால கங்காதர திலகரின் முன்முயற்சியில் அனைவருக்குமான கணேஷ் திருவிழா துவங்கப்பட்ட 125வது ஆண்டாகவும் இந்த ஆண்டு விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

1942க்கும் 1947க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நாட்டு மக்கள் தங்கள் கூட்டு வலிமையை வெளிப்படுத்தினர் என்றும் அதுவே நாட்டின் விடுதலைக்கு வழிவகுத்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 2022ஆம் ஆண்டிற்குள் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவது என்ற உறுதிப்பாட்டை, கூட்டான உறுதியையும் நாம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் சமமானவர்கள்; ஒன்றாக இணைந்து தரமான மாற்றத்தை நம்மால் கொண்டு வர முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

‘நடப்பது நடக்கட்டும்’ என்று திருப்தி அடைந்துவிடும் போக்கை கைவிட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக சாதகமான மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் ‘மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’ என்ற போக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

இந்தியாவின் பாதுகாப்புதான் நமது முன்னுரிமை என்று குறிப்பிட்ட பிரதமர் திரு.மோடி, நாம் மேற்கொண்ட துல்லிய தாக்குதல்கள் இதை வலியுறுத்துகின்றன என்றும் குறிப்பிட்டார். உலக முழுவதிலும் இந்தியாவின் நற்பெயர் அதிகரித்து வருகிறது என்றும் பயங்கர வாதம் என்ற அபாயத்தை எதிர்த்த போராட்டத்தில் பல நாடுகளும் இந்தியாவுடன் ஒத்துழைத்து வருகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். பணமதிப்பு ரத்து நடவடிக்கை பற்றிக் குறிப்பிடுகையில், நாட்டையும் ஏழைகளையும் கொள்ளையடித்து வந்தவர்கள் அமைதியாகத் தூங்க முடியாமல் தவித்தனர் என்றும், இன்று நேர்மை பாராட்டப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். கருப்புப் பணத்திற்கான போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பம் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரும் என்றும் கூறினார். டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனையை மேலும் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

 

ஜிஎஸ்டியின் அமலாக்கம் ஒத்துழைப்பு நிரம்பிய கூட்டாட்சியின் முக்கியமான சித்தரிப்பாக விளங்குகிறது என்று பிரதமர் விவரித்தார். நிதிசார் நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்வதற்கான முன்முயற்சிகளின் மூலம் ஏழைகளும் பொதுவெளியில் இணைகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். சிறந்த நிர்வாகம் என்பதன் பொருள் செயல்முறைகளின் எளிமையான தன்மை, வேகம்தான் என்றும் அவர் வலியுறுத்தினார். ஜம்மு-காஷ்மீர் நிலைமைகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் வசவுகளோ, துப்பாக்கிக் குண்டுகளோ அல்ல; ஒருவரையொருவர் தழுவிக் கொள்வதில்தான் மாநிலத்தின் தீர்வு அடங்கியுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

 

புதிய இந்தியா குறித்த தனது தொலைநோக்கை விவரித்த பிரதமர் மக்கள்தான் அரசின் உந்துசக்தியாக இருப்பார்களே தவிர, வேறுவிதமாக அல்ல என்று குறிப்பிட்டார்.

 

இந்த ஆண்டில் தானிய உற்பத்தியில் சாதனை படைத்த விவசாயிகளையும், வேளாண் விஞ்ஞானிகளையும் பிரதமர் பாராட்டினார். கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்டதை விட அதிகமான அளவில் இந்த ஆண்டும் 16 லட்சம் டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

தொழில்நுட்பம் என்பது மாறிக் கொண்டே இருக்கும் தன்மையின் விளைவாக வேலைவாய்ப்புக்கு பல்வேறு வகையான புதிய திறமைகள் தேவைப்படுகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். நமது நாட்டு இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலைகளை உருவாக்குபவர்களாக உருவாக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

முத்தலாக்கின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தப் பழக்கத்திற்கு எதிராகப் போராடி வருவோரின் துணிவைப் பாராட்டியதோடு, நாட்டு மக்களும் அவர்களோடு சேர்ந்து நிற்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

 

அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றிற்காகவே இந்தியா நிற்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சாதியவாதமும், வகுப்புவாதமும் நமக்கு உதவி செய்யாது என்றும் அவர் கூறினார். நம்பிக்கையின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறையை அவர் வன்மையாகக் கண்டித்ததோடு, இந்தியாவில் அது ஏற்கத்தக்க ஒன்றல்ல என்றும் குறிப்பிட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது இந்தியாவை விட்டு வெளியேறு என்பதே நமது முழக்கமாக இருந்தது; ஆனால் இன்றைய கோஷம் இந்தியாவை முன்னேற்றுவோம் என்பதே ஆகும்.

 

இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வேகத்தை எவ்வகையிலும் குறைக்காமல் அரசு வளர்ச்சிக்கான புதிய பாதைகளில் இந்தியாவை எடுத்துச் செல்கிறது என்றும் அவர் கூறினார்.

 

புனித நூல்களிலிருந்து மேற்கோள் காட்டிய பிரதமர், சரியான நேரத்தில் சரியான நடவடிக்கையை நாம் எடுக்கவில்லை எனில் நாம் விரும்பிய முடிவுகளை நம்மால் அடைய முடியாது. ‘புதிய இந்தியா’விற்கான உறுதியை ‘இந்திய குழு’ மேற்கொள்வதற்கு இதுவே சரியான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

வசிப்பதற்கான வீடுகள், குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகளைப் பெற்றவர்களாக ஏழைகளும், கவலையிலிருந்து விடுபட்டவர்களாக, இன்று ஈட்டுவதை விட இரண்டு மடங்கு ஊதியத்தைப் பெறுபவர்களாக விவசாயிகளும், தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஏராளமான வாய்ப்புகளைப் பெற்றவர்களாக இளைஞர்களும் பெண்களும், பயங்கரவாதம், வகுப்புவாதம், சாதிய வாதம், ஊழல், தன்னைச் சேர்ந்தவர்களுக்கு சலுகைகளை வழங்குதல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டதாக தூய்மையும் உடல்நலமும் நிரம்பிய இந்தியா என்ற புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்  என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

***